ஆங்கிலம் - வியப்புச் சொற்கள் (English Interjections with Tamil Meanings )

English Interjections in Tamil - ஆங்கிலம் - AANGILAM
வியப்புச் சொற்கள் என்றால் என்ன
?


வியப்புச் சொற்கள் என்றால், நாம் ஏதேனும் ஒன்றை, காணும் போது அல்லது நிகழும் போது எம்மையறிமாலேயே எம்முள் எழும் உணர்வின் வெளிப்பாட்டு ஒலிகள் அல்லது சொற்கள் ஆகும்; பொதுவாக எமது நா எழுப்பும் ஒலிகளைக் குறிக்கும். 

தமிழ் இலக்கணத்தில், வியப்புச் சொற்கள்) என்பதனை "பேச்சின் கூறுகளில் ஒன்றாக" வகுக்கப்படவில்லை; என்றாலும், தமிழில் வியப்புச் சொற்கள் அல்லது வியப்பொலிகள் பன்னெடுங்காலந் தொட்டே தமிழரின் அன்றாட வாழ்வில் பயன்பாட்டில் உள்ளன. 

எடுத்துக்காட்டாக: 
  • ப்பா, எவ்வளவு அழகான வீடு!
  • ம்மா, எப்படி அக்காலத்திலேயே இந்தத் தஞ்சைப் பெருங்கோயிலை கட்டியிருப்பார்கள்! 
  • அம்மாடியோவ், சாயுங்கால நேரம் வானம் எப்படி செக்கச் சேவேலென சிவந்திருக்கிறது!
  • அப்பாடா, ஒருமாதிரி, எல்லா வேலைகளையும் முடித்தாயிற்று!
  • ஆ..., காலில் அடிப்பட்டுவிட்டது!
  • யோவ், சும்மா இருய்யா! (இரு ஐயா)

வியப்புச் சொற்கள் - வியப்பொலிகள்

இந்த இரண்டு சொற்களில் (வியப்புச் சொற்கள், வியப்பொலிகள்) எது சரியானது? தமிழர் பயன்பாட்டில் இந்த இரண்டு சொற்களுமே சரியானதுதான். அதனை இரண்டாகப் பிரித்து பார்ப்போம். 

"ப்பா", "ம்மா", "அம்மாடியோவ்", "அப்பாடா" போன்ற சொற்கள் எல்லாமே முறையாக "அப்பா", "அம்மா", போன்ற சொற்களை அடியொட்டி எழும் வியப்புச் சொற்களாகும். எனவே இவற்றை வியப்புச் சொற்கள் எனலாம். 

அதேவேளை, வியப்புடன் எழுப்பும் சொற்றொலிகள் போன்றல்லாமல், "ஆ...", "யோவ்", "ஊ..." போன்ற ஒலிகள் எந்தச் சொல்லையும் அடியொற்றி எழும் சொற்களாக இல்லை. எனவே இவற்றை வியப்பொலிகள் அல்லது உணர்வொலிகள் என்பதுதான் சரியானதாக இருக்கும். 

புராணக் கதை (Myth)

சிவனும் பார்வதியும் படியளக்கச் சென்றனராம். அப்போது ஒரு மரக் கிளையின் நுனியில் ஒருவன் விழும் தருவாயில் இருந்தானாம். அதனைப் பார்த்த பார்வதி அம்மையார் அவனை காப்பாற்ற முயன்றாராம். ஆனால், சிவனோ அவனை காப்பாற்றவது முடியாத செயல்; அவன் விதி முடிந்து விட்டது என்றாராம். இது இருவருக்குமான விவாதம் ஆனதாம். இறுதியில் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனராம். அதாவது மரக் கிளையின் நுனியில் உள்ளவன் கீழே விழும் போது "அம்மா!" என்று கத்தினால், பார்வதி அம்மையார் காப்பாற்றுவதாகவும், "அப்பா!" என்று கத்தினால் சிவன் காப்பாற்றுவதாகவும் எனும் முடிவுக்கு வந்தனராம். ஆனால் மரக்கிளையின் நுனியில் இருந்தவன் விழும் போது, அம்மா!, அப்பா! எனாமல், "ஐயோ!" என்று கத்திக்கொண்டே விழுந்தானாம். அது பொருளற்ற சொல்லாம். அதனால் இருவருமே காப்பாற்றவில்லையாம். இறுதியாக சிவனின் கூற்றுப்படி அவனின் விதி முடிவடைந்து விட்டது என்று கதை முடியும். 

இது தமிழரிடையே தமிழரல்லாதோரால் கட்டவிழ்க்கப்பட்ட புனைவு கதைகளில் ஒன்றாகும். (இப்படிப் பலகதைகள் கட்டவிக்கப்பட்டுள்ளன.) ஆனால் "ஐயோ!" என்பதும் "அப்பா!" என்பதற்கு ஒத்த ஒரு வியப்புச் சொல்தான். அது தந்தையை "அப்பா" என்பது போலவே "ஐயா" என்று அழைக்கும் சொல்லை அடியொட்டி புழக்கத்தில் இருக்கும் ஒரு சொல்தான். 

தமிழ் உறவுமுறைச் சொற்களில் அம்மாவை "அம்மா" என்று மட்டுமல்லாமல் "தாய்" என்று அழைப்பதும் உண்டு. அதேபோன்றே, அப்பாவை "அப்பா" என்று மட்டுமல்லாமல், "ஐயா" என்று அழைப்பதும் உண்டு. இந்த "ஐயா" எனும் சொல்லொயொட்டி "ஐயன்", "ஐயனார்", "ஐயப்பன்" (அப்பாவுக்கு அப்பா) போன்ற சொற்கள் பன்னெருங்காலமாக தமிழரிடையே புழக்கத்தில் உள்ளவையாகும்.  

இந்த "அம்மா", "அப்பா", "தாய்", "ஐயா" எனும் உறவுமுறைகளை குறிக்கும் பெயர்ச்சொற்கள்; "அப்பா!", "அப்பனே!', "அம்மா!", "அம்மோ!", "ஐயா!", "ஐயோ!", "ஐயனே!", "ஐயோ கடவுளே!" போன்ற வியப்புச் சொற்களெல்லாம் தமிழர் தம் அன்றாட பேச்சு வழக்கில்  பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வருபவையாகும், குறிப்பாக இன்றும் நாட்டுப்புறங்களில்

எடுத்துக்காட்டாக: 

  • ஐயோ, குழந்தைக்கு பாலூட்ட மறந்துவிட்டேனே! (பாசத்துடனும் கவலையுடனும் கூடிய ஒரு தாயின் வியப்புச் சொல்)
  • ஐயோ கடவுளே, இவன் ஏன் இப்படிச் சொற்பேச்சு கேற்காமல் நடந்துக்கொள்கிறான். (கவலையும் கோபமும் கலந்த ஒரு வியப்புச் சொல்)
  • ஐயய்யோ, என் உசிருக்குள்ள தீய வைச்சான். (மகிழ்ச்சி கலந்த வியப்புச் சொல் - ஒரு நாட்டுப்புற பாடல் வரிகள்)
  • ஏய், இங்கே வா.
  • இங்க பாருங்க, மகன் பள்ளிக்கூடம் போக மாட்டானாம்! (கணவனின் பெயரைச் சொல்லாமல், "இங்கே பாருங்கள்" என்று தமிழ்ப் பெண்கள் தங்கள் கணவரை அழைக்கும் ஒரு வியப்புச் சொல்.)

ஈழத்தமிழில் வியப்புச் சொற்கள்

மேலுள்ள அதே வியப்புச் சொற்கள் ஈழத்தமிழரிடையே சற்று மாறுபட்ட வடிவில் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக: 
  • எண்ட கடவுளே, எண்ட பிள்ளையை காப்பாற்றுங்கோ!
  • அம்மாளாட்சியான, உன்னை எங்க போனாலும் விடமாட்டன்!
  • எண்டயம்மோ, உந்த மீன் எவ்வளவு பெரிசாயிருக்கு!
  • எண்டையப்பா, உவன் என்ன சொன்னாலும் கேட்கிறானில்லை!
  • ஐயோ, எண்ட புள்ளைய அடிக்காதையுங்கோ!
  • டேய், இஞ்ச வா.
  • இஞ்சருங்கோ, உவன் பள்ளிக்கூடம் போக மாட்டானாம்! ("இங்கே பாருங்கள்" என்பதை யாழ்ப்பாண வட்டார வழக்கில், கணவனின் பெயரைச் சொல்ல விருப்பாத பெண்கள் அழைக்கும் வியப்புச் சொல்.)

"ஐயோ!" வியப்புச்சொல் - அயல்மொழிகளில்

தமிழ் உறவுமுறைச் சொல்லான "ஐயா" என்பதனை அடியொட்டி தமிழரிடையே புழக்கத்தில் இருக்கும், "ஐயோ!' எனும் வியப்புச் சொல், தமிழிலிருந்து கிளைத்த அல்லது தொடர்புடைய மொழிகளிலும் அதே வடிவில் வியப்புச் சொல்லாக பயன்படுவது குறிப்பிடத்தக்கது, குறிப்பாக சிங்கள மொழியினரின் பேச்சு வழக்கில்.

தமிழில் புழக்கத்தில் உள்ள வியப்புச் சொற்கள் போன்றல்லாமல், ஆங்கிலத்தில் உள்ள வியப்புச் சொற்கள் எந்தச் சொல்லினதும் அடியொட்டி உருவானவையாக காணபதற்கில்லை; அவை உணர்வை வெளிப்படுத்தும் ஒலிகளாகவே காணப்படுகின்றன. 

இனி, ஆங்கில வியப்புச் சொற்களை பார்ப்போம்!

ஆங்கில வியப்புச் சொற்கள் - English Interjections 


ஆங்கில வியப்புச் சொற்கள் என்றால் என்ன?

வியப்புச் சொற்கள் என்றால் சிறிய சொற்கள் அல்லது சொற்றொடர்கள் ஆகும்; அவை பல்வேறு திடீர் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த பயன்படுபவை ஆகும். இவை ஆங்கில இலக்கண வாக்கியமைப்புகளுடன் தொடர்பற்று தனித்து பயன்படுகின்றன. 

இவற்றை பல்வேறு வகைகளாக வகைப்படுத்தலாம்: 

  • மகிழ்ச்சியை வெளிப்படுத்துபவை  – Yay! Hooray!
  • வியப்பை வெளிப்படுத்துபவை – Wow! Oh my God!
  • நோ அல்லது வருத்தத்தை வெளிப்படுத்துபவை – Ouch! Ah!
  • வெறுப்பை வெளிப்படுத்துபவை – Yuck! Ew!
  • ஏற்பை வெளிப்படுத்துபவை – Yeah! Uh-huh!
  • ஐயப்பாட்டை வெளிப்படுத்துபவை – Hmm… Well…
  • அறிமுகம்/ விடைபெறல் – Hey! Bye!

எப்பொழுதெல்லாம் வியப்புச் சொற்கள் பயன்படுகின்றன? 

ஆங்கில பேச்சு புழக்கத்திலும் முறைசாரா எழுத்து வழக்கிலும் பயன்படுகின்றன. புனைகதைகளிலும் இதன் பயன்பாட்டைக் காணலாம். எடுத்துக்காட்டாக: 

  • Wow! That’s amazing!
  • Oops! I dropped my phone!
  • Hey! Listen to me!
  • Uh-oh! That’s not a good idea.

கவனிக்கவும்: ஆனால், முறைசார் எழுத்து வடிவில் பெரும்பாலும் இவை பயன்படுத்தப்படுவதில்லை.  

இந்த ஆங்கில வியப்புச் சொற்களை இரண்டாக பிரிக்கலாம். முதலாவது, தனித்து ஒற்றைச் சொல்லாக பயன்படும் சொற்கள். இரண்டாவது, ஒரு வாக்கியத்தின் முன்னால் பயன்படும் சொற்கள். 


தனித்த ஒற்றைச் சொல்லாக பயன்படும் வியப்புச்சொற்கள்:

ஆங்கிலேயர் தமது அன்றாட வாழ்வில் அடிக்கடி கீழுள்ள வியப்புச்சொற்களை பயன்படுத்துவதை காணலாம். 
  • Ah!
  • Aha!
  • Alas!
  • Aw!
  • Cool!
  • Darn!
  • Eek!
  • Bravo!
  • Doh!
  • Hey!
  • Hi!
  • Hmm!
  • Hurrah!
  • Oh!
  • Oops!
  • Ouch!
  • Ugh!
  • Um!
  • Well!
  • Yikes!
  • Yow!


வாக்கியங்களின் முன்னால் பயன்படும் வியப்புச்சொற்கள்:

கீழுள்ள பயன்பாட்டை கவனிக்கவும். இவை சாதாரணமாக ஒரு வாக்கியத்தின் முன்னால் பயன்படுத்தப்படும், குறிப்பாக அன்றாட ஆங்கில பேச்சு வழக்கில். புனைவு கதைப்புத்தகங்களிலும் காணலாம். 
  • Hey, that's my book!
  • Ouch, that hurts!
  • Hey, you're kinda cute!
  • Oh no, I forgot that the exam was today!
  • Hey, Put that down!


ஆங்கில பேச்சின் கூறுகளில் - வியப்புச் சொற்கள்

ஆங்கில பேச்சின் கூறுகளில் Nouns, Pronouns, Verbs, Adjectives, Adverbs, Prepositions, Conjunctions வரிசையில் Interjections வியப்புச் சொற்களும் ஒரு கூறாக உள்ளது.

தொடர்புடையப் பாடங்கள்:


இப்பாடம் தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் கேள்விகள் இருந்தால் இப்பாடத்தின் பின்னூட்டத்தின் ஊடாக கேட்கவும். இப்பாடத்துடன் தொடர்பில்லாத கேள்விகளானால் ஆங்கிலம் கேள்வி பதில் பகுதியில் கேட்கவும்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

நன்றி!

அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு (அருண்) Download As PDF